சாதித்த பாரத அணி

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28ம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. 72 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். காமன்வெல்த் போட்டியின் நிறைவு நாளில் பாரதம் 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது. 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 176 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 92 பதக்கங்களுடன் கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளது. 2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், 101 பதக்கங்களை வென்று பாரதம் 2வது இடத்தைப் பிடித்தது என்றாலும், அதில் நம் வீரர்கள் பதக்கங்களை குவித்த துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, கிரேக்க ரோமன் மல்யுத்தம், டென்னிஸ் என எந்த விளையாட்டுகளும் தற்போதைய 2022 காமன்வெல்த் போட்டியில் இடம்பெறவில்லை. ஆனால், இம்முறை நமது அணி வீரர்கள், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், ஹாக்கி என பரவலாக பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர். இதேபோல, கடந்த 2018ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று பாரதம் 3வது இடத்தைப் பிடித்தது. ஒரு காலத்தில் நமது பாரத விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் என்பது ஒரு கனவாக மட்டுமே இருந்த சூழலில், நமது மத்திய அரசு அளித்து வரும் சிறப்பான ஊக்கம், பயிற்சி, வசதி வாய்ப்புகள் காரணமாக கடந்த சில வருடங்களாக ஒலிம்பிக் உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் நமது பாரத வீரர்கள் தொடர்ச்சியாக சாதனை புரிந்து வருகின்றனர்.