கரும்புக்கான சீசன் துவங்கவுள்ள நிலையில் மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது. ஆம், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான கரும்பு பருவத்தில் கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ. 305 வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 8 ஆண்டுகளில் கரும்புக்கான நியாயமான விலையை ரூ. 210ல் இருந்து படிப்படியாக தற்போது ரூ. 305 வரை சுமார் 34 சதவீதத்திற்கு மேல் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
5 கோடி விவசாயிகள்: மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் பயனடைவார்கள். அத்துடன் கரும்பு ஆலையில் பணிபுரியும் 5 லட்சம் ஊழியர்களும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவால் நடப்பு கரும்பு பருவத்தில் 3,600 லட்சம் டன்னுக்கும் மேலான அளவிற்கு கரும்பை விவசாயிகளிடமிருந்து கரும்பு ஆலைகள் கொள்முதல் செய்யும் என்றும் இதனால் விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முறைகள் அறிமுகம்: கடந்த சர்க்கரைப் பருவங்களில் சர்க்கரைத் துறைக்காக எடுக்கப்பட்ட, அதிக மகசூல் தரும் கரும்பு வகைகள் அறிமுகம், சொட்டு நீர் பாசன முறை, சர்க்கரை ஆலை நவீனமயமாக்கல் மற்றும் பிற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், கரும்பு சாகுபடி பரப்பு , கரும்பு உற்பத்தி, போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நசுக்கப்பட்ட கரும்பு, சர்க்கரை உற்பத்தி மற்றும் அதன் மீட்பு சதவீதம், விவசாயிகளுக்கு செலுத்தும் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. நடப்பு சர்க்கரை பருவத்தில் செய்யப்பட்ட சாகுபடி பரப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் கரும்பு உற்பத்தியை வைத்து, சர்க்கரை ஆலைகள் மூலம் 3,600 லட்சம் டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
உற்பத்தி அதிகரிப்பு: தற்போதைய சர்க்கரைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பாரதம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்வதுடன் தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது தேசத்தின் நிதி பற்றாக்குறையை குறைக்க உதவுகிறது. 2017 முதல் 2021 வரையிலான கடந்த 4 சர்க்கரை சீசன்களில், சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
எப்.ஆர்.பி, எம்.எஸ்.பி: கடந்த 8 ஆண்டுகளில் அரசாங்கம் நியாயமான மற்றும் லாபகரமான விலையை (எப்.ஆர்.பி) 34 சதவீதம் அதிகமாக உயர்த்தியுள்ளது. சர்க்கரை விலை வீழ்ச்சி, கரும்புக்கான பாக்கித் தொகைகள் குவிவதைத் தடுக்க, சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை (எம்.எஸ்.பி) என்ற கருத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சர்க்கரை ஏற்றுமதியை எளிதாக்குவதற்கும், இருப்புகளை பராமரிப்பதற்கும், எத்தனால் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், விவசாயிகளின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கும் ரூ. 18,000 கோடிக்கும் அதிகமான நிதியுதவி சர்க்கரை ஆலைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியும் எத்தனாலும்: சர்க்கரை ஏற்றுமதி மற்றும் எத்தனாலுக்கு மாறியதன் காரணமாக, சர்க்கரைத் துறை தன்னிறைவு அடைந்துள்ளன. ஆலைகளின் பணப்புழக்கத்தை மேம்படுத்த அரசின் ஆதரவும் தேவைப்படுவதில்லை. எத்தனால் உற்பத்திக்காக உபரி சர்க்கரையை மாற்றியமைக்க சர்க்கரை ஆலைகளின் நிதி நிலைமைகளை மேம்படுத்த வழிவகுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அவர்கள் கரும்பு நிலுவைத் தொகையை முன்கூட்டியே செலுத்த முடிகிறது.
நிலுவைத்தொகை விடுவிப்பு: முந்தைய சர்க்கரை சீசனில் செலுத்தப்படவேண்டிய சுமார் ரூ. 92,938 கோடி கரும்பு நிலுவைத் தொகையில் ரூ. 92,710 கோடி செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு சர்க்கரை பருவத்தில், கரும்பு நிலுவைத் தொகையில் ரூ. 1,15,196 கோடி தரப்பட வேண்டிய நிலையில், ரூ. 1,05,322 கோடி கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய பருவங்களை விட அதிகமாகும்.