எம்.எல்.ஏ பதவி ராஜினாமா

குல்தீப் பிஷ்னோய் ஹரியானா மாநில ஆதம்பூர் சட்டமன்ற தொகுதியில்  4 முறை எம்.எல்.ஏவாக இருந்து இருக்கிறார். இதில் இரண்டு முறை பஜன்லாலின் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாகவும் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன்லாலின் மகனான குல்தீப் பிஷ்னோய், தற்போது காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்துள்ளார். இதையடுத்து நேற்று ஹரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஹரியானா சட்டசபை சபாநாயகரிடம் கொடுத்தார். பின்னர் பேசிய அவர், “புபீந்தர் சிங் ஹூடா என்னை ராஜினாமா செய்யுமாறு சவால் விடுத்தார், அவருடைய சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தேன். ஆதம்பூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுமாறு இப்போது அவருக்கு நான் சவால் விடுகிறேன்” என கூறினார். முன்னதாக, குல்தீப் பிஷ்ணோய் தந்தையான பஜன்லால், 2007ல் காங்கிரசில் இருந்து விலகி, ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார். பஜன்லாலின் மறைவுக்கு பிறகு அந்த கட்சியை நடத்தி வந்த குல்தீப் பிஷ்னோய் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்து பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தார். அதற்கு பிறகு 2016ல் மறுபடியும் காங்கிரஸில் இணைந்தார். ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்த அவருக்கு அது கிடைக்காததால் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கானை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க ஆதரவு சுயேச்சை வேட்பாளரான கார்த்திகேய ஷர்மாவுக்கு ஓட்டு போட்டார். இதனால் காங்கிரஸ் மேலிடம் இவரை சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் இவர் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.