சுதந்திரம் 75 – அமுதப் பெருவிழா நாடு முழுவதும் ஒரு லட்சம் பள்ளிகளில் ஆகஸ்டு 1 முதல் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக தமிழகத்தில் சுமார் 1,000 பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் அமுத பெருவிழா நடைபெறத் துவங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் சார்பாக, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ‘சுதந்திரம் 75 அமுதப் பெருவிழா’ கொண்டாடப்பட்டது. விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்கள் பற்றி எடுத்துரைத்து மாணவர்களிடையே தேசப்பற்று வளர வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எடுத்துரைத்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய 93 வயதான சிவகாமி குப்புசாமி கலந்துகொண்டார். நேதாஜி படையில் நேதாஜி முன்னிலையில் ஜான்சிராணி வேடமிட்டு சிங்கப்பூர்-ல் அவர் பாடிய தேசபக்திப் பாடலை மாணவர்கள் முன்னிலையில் விழாவில் பாடி மாணவர்களுக்கு தேச பக்தி வளர வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவில் தேசிய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், தர்மபுரி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.