தமிழகத்தில் காவலர் முதல் காவல்துறை இயக்குனர் வரை அனைவருக்கும் காக்கி நிற சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும், அவரவர் அதிகாரம், தகுதிகளுக்கு ஏற்ப சீருடையில் நட்சத்திரம், வாள், அசோக சின்னம் போன்ற அடையாளங்கள் இருக்கும். எனினும், அவர்களுக்கென ஒட்டுமொத்தமாக ‘தமிழக காவல் துறை’ என்பதை குறிக்கும் எந்த அடையாளமும் (லோகோ) கிடையாது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறையினருக்குமான ஒரே மாதிரியான அடையாளம் அவர்கள் சீருடையில் கூடுதலாக இன்று முதல் இடம்பெறவுள்ளது. இதற்கான அறிமுக விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல்வர் ஸ்டாலின், தலைமை டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்கெனவே, உத்தர பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் மாநிலத்தின் பெயரை குறிக்கும் வகையில் காவல்துறை சீருடையில் அடையாளம் உள்ளது. அந்த பட்டியலில் தற்போது 10வது மாநிலமாக தமிழகம் இணையவுள்ளது. இந்த லோகோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசியக் கொடி ஆகியவற்றுடன் ‘TAMILNADU POLICE’ (தமிழ்நாடு காவல்), ‘TRUTH ALONE TRIUMPHS’ (வாய்மையே வெல்லும்) என்பவை ஆங்கிலத்திலும், ‘காவல்’ என தமிழிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.