நாடாளுமன்றத்தில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தின்படி 2019 முதல் 2021 வரை எப்.சி.ஆர்.ஏ உரிமங்கள் ரத்து மற்றும் மறுப்பு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் முகமது பஷீர் கேட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளிக்கையில், “இந்த மூன்று ஆண்டுகளில், எப்.சி.ஆர்.ஏ விதிகளின் கீழ் 1,811 சங்கங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி அனைத்து சங்கங்களுக்கும் நியாயமான முறையில் கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், எப்.சி.ஆர்.ஏ உரிமங்களை புதுப்பிப்பதற்கான 783 விண்ணப்பங்கள் அந்த காலகட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன. எப்.சி.ஆர்.ஏ உரிமங்களை இழந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அதிகபட்ச எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 218 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக, மத்திய பிரதேசத்தில் 206, மேற்கு வங்கத்தில் 193, ஆந்திராவில் 168, பீகாரில் 122, உத்தரப் பிரதேசத்தில் 115, ஒடிசாவில் 109 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் எப்.சி.ஆர்.ஏ உரிமங்களை புதுப்பித்தல் மறுக்கப்பட்ட அதிகபட்ச என்.ஜி.ஓக்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. அங்கு 110 விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர, ஆந்திராவில் 84, தமிழகத்தில் 66, மேற்கு வங்கத்தில் 65, உத்தரபிரதேசத்தில் 59, கர்நாடகாவில் 57 சங்கங்களும் புதுப்பிக்க மறுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.