கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எம் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ சர்ச்சில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. காரகோணத்தில் உள்ள டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மாணவர் சேர்க்கையில் முறைகேடுகளை நடத்தியதாக புகார்கள் எழுந்தன. சர்ச்சால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை வழங்குவதாகக் கூறி பெரும் தொகையை சட்டவிரோதமாகப் பெற்றதாகவும் எம்.டி., எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு 50 லட்ச ரூபாய்க்கு மேல் கேபிடேஷன் கட்டணம் வசூலித்த சர்ச் நிர்வாகம், பின்னர் அவர்களுக்கு சேர்க்கை வழங்கவில்லை எனவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2020ம் ஆண்டில், இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யத் தவறியதற்காக காவல்துறையின் குற்றப்பிரிவை கடிந்துகொண்டது. ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் பிஷப் உள்ளிட்டோரை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் பயப்படுகின்றனரா? என்று கேட்டிருந்தது. மேலும், பிஷப் தர்மராஜ் ரசாலம் வழங்கிய போலி சமூக சான்றிதழ்களை சமர்ப்பித்து கல்லூரியில் சேர்க்கை பெற்ற 11 எம்.பி.பி.எஸ் மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.