கடலில் கரையும் மக்கள் வரிப்பணம்

கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில் சுமார் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க உள்ளதாகவும் இதற்குத் தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மக்களின் வரிப்பணத்தில் ரூ. 81 கோடியை கடலில்கொட்டி அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்தை காண கடலில் 360 மீட்ட தொலைவுக்கு கண்ணாடிப் பாலம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது எனக்கூறி மின்சாரம், சிமெண்ட், அரிசி, பருப்பு என அனைத்து பொருட்களின் விலைகளையும் உயர்த்திவிட்ட தமிழக அரசு, வீட்டு வரி உட்பட வரிகளையும் எக்கச்சக்கமாக உயர்த்திவிட்டது. தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்கவில்லை. இந்நிலையில் தற்போது வெளியான இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள், கட்சிகள் என அனைத்துத் தரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களும் கண்டனமும் எழுந்தன. அமைச்சர் எ.வ வேலு, ‘இது கருணாநிதிக்கு மக்கள் செய்யும் நன்றிக்கடன், இதை எதிர்ப்பது கருணாநிதிக்கு செய்யும் துரோகம்’ என சொல்லிப்பார்த்தார். ஆனாலும் கண்டனங்கள் தொடர்ந்து வலுத்தன. இதையடுத்து, ‘கருணாநிதிக்கு நினைவுச் சின்னமாகக் கடலில் பேனா அமைப்பை உருவாக்குவது தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அது பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை” என கூறி பின்வாங்கியுள்ளார் தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன்.