இன்று, ஊதுபத்தித் தொழில் பாரதத்தில் ஆண்டுக்கு ரூ. 12,000 கோடி வரை சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் பொதுமுடக்கத்தின்போது நாட்டில் ஊதுபத்திகளின் தேவை 30 சதவீதம் அதிகரித்ததாக தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். முந்தைய அரசுகளின் பழைய லைசென்ஸ் ராஜ் கொள்கைகள், பிரிட்டீஷ் கால சட்டங்கள் மற்றும் நூற்றாண்டு பழமையான உற்பத்தி முறைகள் காரணமாக நமது நாட்டில் ஊதுபத்தித் தொழில் மெல்ல நலிவடையத் துவங்கியது. வாசனை தரும் தொழில் வாசனையற்றுப்போனது. பல ஊதுபத்தி தயாரிப்பாளர்கள் அந்த தொழிலையே கைவிட்டனர். விளைவு நமது ஊதுபத்தி தேவைகளுக்காக நாம் சீனா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் ஊதுபத்திகளை இறக்குமதி செய்தோம். இந்த பிரச்சனைகளை சரிசெய்து ஊதுபத்திகளின் தயாரிப்பை உள்நாட்டில் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, மூங்கில் குச்சிகள் உட்பட ஊதுபத்தி மூலப்பொருட்கள் மீதான தேவையற்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ஊதுபத்திகளை இனி யாரும் சுதந்திரமாக இறக்குமதி செய்ய முடியாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஊதுபத்திகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய தேவையான ஊக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஊதுபத்தித் தொழில் வேகமாக தற்சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. நிச்சயமாக நேரம் எடுக்கும். இன்றும் பாரதம் அதன் இலக்கை அடைய ஆண்டுக்கு மூங்கில் மட்டுமே 6,000 டன் தேவைப்படுகிறது. அது தற்போது இறக்குமதியால் மட்டுமே ஈடு செய்யப்படுகிறது என்ற நிலையில் நமது இலக்கை அடைய சிறிது காலம் பிடிக்கும் என்றாலும் அது சாத்தியமானது தான்.