கேரள அரசின் மசாலா பத்திர ஊழல்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் (KIIFB) நிதி பரிவர்த்தனைகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக செவ்வாய்கிழமை நேரில் ஆஜராகுமாறு ஆளும் கட்சியான சி.பி.ஐ.எம்’மின் மூத்த தலைவரும் முந்தைய இடதுசாரி அரசின் நிதியமைச்சருமான தாமஸ் ஐசக்கிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, தென் மாநிலங்களில் பெரிய மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க ரூ. 50,000 கோடியை திரட்டுவதற்கான கேரள அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 2019ம் ஆண்டில் கேரள அரசு அதன் முதல் மசாலா பத்திர வெளியீட்டின் மூலம் 2,150 கோடி ரூபாயை திரட்டியது. பாரத நிறுவனங்களால் பாரதத்துக்கு வெளியே வழங்கப்பட்ட ரூபாய் மதிப்பிலான இத்தகைய ‘மசாலா’ பத்திரங்கள் மூலம் வெளிநாட்டுக் கடன் வாங்குவது  மத்திய அரசின் வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை சட்டத்தை (பெமா) மீறும் செயலாகும். அவ்வகையில் இந்த பத்திரங்கள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதா என்பதை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை சேகரிக்க இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.