டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தையொட்டி கட்டப்படவுள்ள பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ), கேபினட் செயலகம், இந்தியா ஹவுஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எக்ஸிகியூட்டிவ் என்க்ளேவைக் கட்டுவதற்கான ஏலத்தில், ஹைதராபாத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனமான டி.இ.சி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மிகக் குறைந்த ஏலதாரராக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பொதுப்பணித் துறை (CPWD) மதிப்பிட்ட ரூ. 1,328 கோடி செலவை விட 10.44 சதவீதம் குறைவாக, சுமார் ரூ.1,189 கோடி செலவில் இவற்றை கட்டித் தருவதுடன் ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளை இலவசமாக மேற்கொள்வதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம், ரூ. 1,407 கோடியையும் , லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் சுமார் ரூ.1,424 கோடியையும் ஏல விலைகளாக குறிப்பிட்டிருந்தன. தற்போது புதிய நாடாளுமன்ற கட்டடத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டிவருகிறது. ஷாபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி லிமிடெட், விஜய் சௌக் முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா அவென்யூவின் மறுவடிவமைப்புப் பணிகளைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.