ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணைகளை வாங்க 2018ம் ஆண்டு பாரதம் ஒப்பந்தம் போட்டது. இதற்கு அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், நாட்டின் பாதுகாப்பு தேவையை கருதி பாரஸ்தம் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தியது. இதனால், பாரதம் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார். ஆனால் அதன் பிறகு அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், இந்த பொருளாதாரத் தடைகள் தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில், தற்போது ‘காட்சா’ சட்டப்படி பொருளாதார தடை விதிப்பதில் இருந்து பாரதத்திற்கு விலக்களிக்கும் சட்டத் திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மசோதாவை தாக்கல் செய்த ஆளும் ஜனநாயகக் கட்சியின் எம்.பி.யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரோ கன்னா, “எல்லையில் சீன ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுக்கவும், தனது சொந்த ராணுவ பலத்தை பெருக்கவும் பாரதத்திற்கு ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணைகள் தேவைப்படுகின்றன.எனவே பாரதத்திற்கு இதில் இருந்து விலக்களிக்க வேண்டும். இது பாரதம் அமெரிக்கா இடையே உள்ள ராணுவ ஒப்பந்தத்திற்கு மேலும் வலுசேர்க்கும். இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்து எம்.பிக்களும் ஒருமித்த ஆதரவு தர வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.