மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிந்ததால், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து புதன்கிழமை விலகினார் முக்தார் அப்பாஸ் நக்வி. அவரது அமைச்சக பொறுப்பு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நக்வி அளித்த பேட்டியில், “நாடாளுமன்றத்தில் எனது பதவிக்காலம் முடிவடைந்திருக்கலாம். ஆனால் எனது அரசியல் மற்றும் சமூகப் பயணம் தொடரும். அனைத்து தரப்பினரும் பா’ஜ’கவை ஏற்றுக் கொள்ளும் வகையில், கட்சித் தொண்டராக தொடர்ந்து பணியாற்றுவேன். நான் அமைச்சராக பதவி வகித்தபோது எனது துறை முழு நேரமாக செயல்பட்டது எனக்கு திருப்தி அளிக்கிறது. ஒருதலைப்பட்சமாக இல்லாமல், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய பணியாற்றினேன். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வெறும் 3 கோடி பேருக்கு மட்டும் கல்வி உதவித் திட்டம் வழங்கப்பட்டது. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மட்டும் 5.5 கோடி பேருக்கு கல்வி உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.