சாதித்த பா.ஜ.க

நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தர பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதன் மூலம், மொத்தமுள்ள 10 தொகுதிகளில் ஐந்தை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடியின் கோட்டையாக கருதப்படும் அசம்கர், ராம்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. அதேபோல, திரிபுரா சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க.வை சேர்ந்த முதலமைச்சர் மாணிக் சஹா வெற்றி பெற்றுள்ளார். அகர்தலா, திரிபுரா சட்டசபைக்கான 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. சி.பி.ஐ.எம் மற்றும் திருணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவை திரிபுரா தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப்பில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சங்ரூர் தொகுதியை சிரோன்மணித்தளத்திடம் ஆம் ஆத்மி கட்சி பறிகொடுத்துள்ளது. ஆனால் டெல்லியில் ராஜிந்தர் சட்டமன்றத் தொகுதியை தன்வசப்படுத்திக்கொண்டது. ஆந்திரா அத்மகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் வேட்பாளரான மேகபதி விக்ரம் ரெட்டி வெற்றிபெற்றார். ஜார்கன்ட் மாநிலம் மந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேஹா டிர்கி வெற்றி பெற்றார். இத்தேர்தல் மூலம், நாடாளுமன்றத்தில்  உத்திரப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் மாநில அவையில் பா.ஜ.கவின் பலம் தற்போது கூடியுள்ளது. இதற்கிடையே, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ‘பா.ஜ.கவுக்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர். நாடு முழுவதும் மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யும் விதம், பிரதமர் மோடி மீது அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை காட்டுகிறது’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.