காங்கிரஸ் கட்டாயப்படுத்தியது

கோத்ரா கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கட்டாயப்படுத்தியது என்று ஊடகவியலாளர் சுதீர் சௌதரி தெரிவித்துள்ளார். முன்னதாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்த கலவரம் தொடர்பாக ஜீ செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் சுதீர் சௌதரிக்கு மோடி முதல்வராக இருந்தபோது அளித்த பேட்டியை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. அந்தப் பேட்டி தொடர்பாக பி.டி.ஜ செய்தி நிறுவனத்திடம் பேசிய சுதீர் சௌதரி, “கோத்ரா கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரித்த போது, பிரதமர் மோடி எனக்கு அளித்த பேட்டி குறித்து விசாரிக்க எனக்கு இருமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அந்தப் பேட்டியில், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உள்ளது, ஒட்டுமொத்த கலவரமும் கோத்ரா ரயில் எரிப்பின் எதிர்வினைதான் என்றும் பிரதமர் மோடி கூறினாரா என எஸ்.ஐ.டி என்னிடம் விசாரித்தது. ஆனால் அவர் அதுபோல எதுவும் கூறவில்லை. எனினும் அவர் அவ்வாறு கூறியதாக வாக்குமூலம் அளிக்குமாறு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்னைக் கட்டாயப்படுத்தியது. அந்தக்  காலகட்டத்தில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் தன்னார்வ அமைப்பு போன்றவற்றின் சார்பிலோ அல்லது சில அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் சார்பிலோ மோடிக்கு எதிராக பொய்யான கதை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. அதில் மோடி அளித்த பேட்டிக்காக எனக்கு அழுத்தம் அளித்ததும் அடங்கும். எனினும் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்து செவிவழிச் செய்திகள்தானே தவிர, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.