கன்னட ஆர்வலர்கள் என்று அழைக்கப்படும் சிலர் கர்நாடக அரசின் பாடப்புத்தகத் திருத்தத்துக்கு எதிராக பெங்களூருவில் உள்ள சுதந்திரப் பூங்காவில் சில நாட்களுக்கு முன் ஒரு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை செய்தியாக்க வந்த ஊடகவியலாளர்களில் சம்வாதா சேனலில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் தேஜா என்பவரும் ஒருவர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தீபு கவுடா மற்றும் பைரப்பா ஹரிஷ் குமார் ஆகியோர் அடங்கிய ஒரு வன்முறை கும்பல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஆதரிப்பதற்காக தேஜாவை குறிவைத்து கொடூரமாகத் தாக்கினர். இதுகுறித்து பேசிய தேஜா, “காவல்துறை என்னை சரியான நேரத்தில் காப்பாற்றவில்லை என்றால், நான் கொல்லப்பட்டிருப்பேன்” என்று தெரிவித்தார். இதையடுத்து, தேஜா தாக்கப்பட்டதைக் கண்டித்து அதே பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநில அரசு மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ‘ஜனநாயகம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான மனநிலையால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.