ஜெர்மனியின் தலைமையின் கீழ் ஜூன் 26 மற்றும் 27ல் நடைபெற உள்ள ஜி 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டு பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸ் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஜெர்மனி செல்கிறார். அப்போது இரண்டு கட்டங்களாக சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகிய தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய விவகாரங்களை சர்வதேச நாடுகள் மூலம் வலிமைப்படுத்தும் வகையில், அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே பிரதமர் மற்ற நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார். ஜி 7 மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ஜூன் 28ல் ஐக்கிய அரபு எமிரேட் செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு முன்னாள் அதிபரும், அபுதாபி அரசருமான எச்.எச். ஷேக் கலிஃபா பின் சையத் அல் நஹியான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அத்துடன், ஐக்கிய அரபு எமிரேட் புதிய அதிபராகவும், அபுதாபி அரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட எச். எச். ஷேக்முகமது பின் சையத் அல் நஹியானுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். அன்று இரவே பாரதம் திரும்புகிறார்.