வன்முறையாளர்களுக்கு இடமில்லை

ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு சேவையாற்றும் ‘அக்னிபாத்’ திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ரயில்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. வன்முறையி ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை தூண்டிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி, ‘இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இந்த அருமையான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை. ‘அக்னி பாத்’ மூலம் சேர்பவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம். ஒவ்வொரு விண்ணப்பமும் காவல்துறை மூலம் சரிபார்க்கப்படும். நாசவேலைகளில் ஏதும் ஈடுபடவில்லை என காவல்துறை சான்று பெற்றுத் தந்தால்தான் ராணுவத்தில் சேர முடியும். அக்னி பாத் திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முப்படையில் சேர வாய்ப்பு உள்ளது. அக்னி வீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். அக்னி வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தால் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும். அக்னி வீரர்களுக்கு பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் அறிவித்துள்ள சலுகைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. போராட்டம் காரணமாக எதையும் அறிவிக்கவில்லை’ என தெரிவித்தார்.