‘மண் காப்போம்’ வெற்றிப் பயணம்

மண்வளம் பாதுகாப்பிற்காக தனது 65வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், இன்று தமிழகம் திரும்புகிறார். இதுவரை சுமார் 27,200 கிலோ மீட்டர் பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சத்தியமங்கலம் வழியாக தமிழகம் வரும் அவருக்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். பிறகு சூலூர் விமானப்படை தளத்தில் நடக்கும் ‘மண் காப்போம்’ இயக்க நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பங்கேற்கிறார். அந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மாலையில் கொடிசியாவில் நடக்கும் உலக யோகா தின நிகழ்ச்சியிலும் ஜக்கி வாசுதேவ் பங்கேற்கிறார். ஆதியோகி முன்பு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். சர்வதேச அளவில் மிக நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய இப்பயணத்தின் மூலம் இதுவரை 74 நாடுகள் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாரதத்தில் 7 மாநிலங்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கான மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை கடந்த மார்ச் 21ல் லண்டனில் தொடங்கிய ஜக்கிவாசுதேவ், இங்கிலாந்து, ஜெர்மனி, செக்குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், அஸர்பைஜான், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், ஓமன் என பல்வேறு நாடுகளில் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர், ஓமன் நாட்டில் இருந்து கடல் வழியாக மே 29ம் தேதி பாரத நாட்டிற்கு வந்தடைந்தார். பாரதத்தில் குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பயணித்தார். அம்மாநில முதல்வர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து மண்வளப் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வலியுறுத்தினார்.