மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ், ஆயுதப்படைகளில் பணிபுரியும் அக்னி வீரர்களின் நான்காண்டு சேவைக்குப் பின் அவர்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்து தொலை தகவல் தொடர்புத்துறை, அதன் சேவை வழங்குவோருடனான கூட்டத்தை நடத்தியது. அதில், அக்னி வீரர்களின் திறமை, கட்டுப்பாடு, பெற்ற தொழில்திறன்கள் ஆகியவற்றை தொலைதகவல் தொடர்புத்துறை சேவைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தொலை தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் (ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா) பிரதிநிதிகளும் தொலை தகவல் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில், அக்னி வீரர்களுக்கான வேலைவாய்ப்புக்கான விவாதத்தின் போது, கண்ணாடி இழை பராமரிப்பு, குளிர்சாதனங்கள் பராமரிப்பு, கடைக்கோடிக்கு தொடர்பளிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வழங்குதல், வீடுகளுக்கு கண்ணாடி இழை அமைத்தல் போன்ற பல துறைகள் கண்டறியப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயிற்சி பெற்ற, திறன் மிக்க கட்டுப்பாடான இளைஞர்கள், தொலை தகவல் தொடர்புத்துறை உட்பட நாட்டிற்கு சொத்தாக இருப்பார்கள் என்பதை தொலை தகவல் தொடர்பு சேவை வழங்குவோர் ஒப்புக்கொண்டனர்.