சென்னை டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ், எச்.எஸ்.எஸ் ரத்ததானிகள் அமைப்பினரால் சர்வதேச ரத்ததானிகள் விழா கொண்டாடப்பட்டது. 50,100க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்தவர்கள், உடல் நலம் பேணி வருடந்தோறும் 4 முறை தவறாமல் தருபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக இயங்கிவரும் ரத்ததானி அமைப்புகள் மற்றும் ரத்த வங்கிகளுக்கும் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், வைஷ்ணவா கல்லூரி செயலர் அசோக் குமார் முந்த்ரா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்பாரத மக்கள் தொடர்பு செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினர். ஐசரி கணேஷ் தனது உரையில் ‘பல்வேறு சேவைகளை நீண்ட காலமாக செய்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இன்று ரத்ததானம் செய்பவர்களை, நிறுவனங்களையும் கௌரவிப்பது மிகவும் சிறப்பு. எங்களது இலவச மருத்துவமனை முலம் நாங்களும் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து சேவை செய்ய விழைகிறோம் என குறிப்பிட்டார். அசோக்குமார் முந்த்ரா ‘ரத்ததானம் மூலர் ஒரு உயிரை காப்பதுடன் அவரை நம்பியுள்ள குடும்பத்துக்கே உயிர் தருவதாகும்’ என்றார். பிரகாஷ் தனது சிறப்புரையில், ‘ரத்ததானத்தில் ஈடுபடும் அனைவருமே மற்றவர்களுக்கு முன்னுதாரணமானவர்கள். ரத்ததானம் மட்டுமன்றி கண், தேக தானங்களை வலியுறுத்தி எதிர்காலத்தில் இந்த அமைப்பை பற்றி அறியாத ஒரு மருத்துவமனையும் இல்லை எனும்படியாக சேவைகள் வளரவேண்டும்’ என வாழ்த்தினார்.