ரத்த தானம் செய்வது குறித்து புரிதல் ஏற்படுத்துவதற்காகவும் தன்னார்வத்தோடு இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 18 லிருந்து 60 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் ரத்ததானம் செய்யலாம். உடல் எடை 50 கிலோவிற்கு மேல் உள்ள ஒரு ஆரோக்கியமான மனிதர் 450 மில்லி லிட்டர் வரை ரத்ததானம் செய்ய முடியும். ஆண்கள் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒரு முறையும் பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்வதற்கு வாய்ப்புள்ளது. ரத்த தானம் செய்வது நீண்டகால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. உடலில் உள்ள இரும்புச் சத்தை சரி செய்வதற்கு ரத்த தானம் பயன்படுகிறது. ரத்தத்தில் இரும்புச் சத்து என்பது மிகவும் முக்கியமானது. மாரடைப்பு கேன்சர் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்து இரத்ததானம் மனிதனைக் காப்பாற்றுகிறது.
சமயத்தில் ரத்தம் கிடைக்காமல் தலசீமியா போன்ற நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக தொல்லைக்கு ஆளாகிறார்கள். முக்கியமாக நெகட்டிவ் குரூப் ரத்தம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அரசாங்க மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சாலை விபத்துக்கு உள்ளானவர்களின் தேவைக்கு ரத்தம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உடலில் உள்ள உறுப்புகளுக்கு மிகவும் முக்கியமான ஆதாரம் ரத்தமே. மனித உடலில் மிகவும் முக்கியமான பொருள் ரத்தம். ரத்தத்திற்கு குலம் மதம் இனம் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. உயிர் போகும் நிலையில் உள்ளவர்களுக்கு ரத்த தானம் செய்வதால் அவர்களுக்கு ரத்தம் அளித்தவர் உயிர் அளித்தவராகிறார்.
மனித உடலில் ரத்த அணுக்கள் ஒவ்வொரு 120 நாட்களுக்கு ஒருமுறை அழிந்து மீண்டும் புதியவை உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்வதால் புதிய ரத்தம் உற்பத்தியாகி தானம் செய்தவருக்கு உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. ஒரு முறை ரத்த தானம் செய்த பின் இரண்டு வாரங்களிலேயே முன்பு போலவே ரத்தத்தின் அளவு பெருகுகிறது. ‘ரத்த தானம் செய்யுங்கள்; சக மனித உயிரைக் காப்பாற்றுங்கள்’ என்பது ரத்த தானத்தின் முக்கிய முழக்கம். முன்பெல்லாம் ரத்த தானம் செய்வதற்கு மக்கள் அஞ்சினார்கள். ஆனால் காலத்த்திற்கேற்ப மக்களின் கண்ணோட்டமும் மாறியது. தினமும் தன்னார்வத்தோடு வந்து ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இணையம், சமூக ஊடகங்கள் மூலம் ரத்த தானம் குறித்த அச்சங்கள் நீங்கி ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது நல்ல முன்னேற்றம்.