போராட்டக்காரர்களை துரத்திய குவைத்

முன்னாள் பா.ஜ.க தலைவர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது குவைத் அரசு தற்போது நாட்டின் சட்டங்களையும் விதிகளையும் மீறியதாகக்கூறி நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது. குவைத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் நாட்டில் போராட்டம் நடத்தக்கூடாது என்ற விதி உள்ளது.  எனவே, இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அந்தந்த நாடுகளுக்கு அனுப்ப குவைத் அரசு காவல்துறைக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவர்கள் குவைத்துக்குள் நுழைய நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது. குவைத் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து நாடு கடத்தும் மையத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் பாரதம், பாகிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போராட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்று தனது குடிமக்களுக்கு அறிவுரை வழங்கியதுடன் இதில் பாகிஸ்தானியர் யாரேனும் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.