ரூ.10 லட்சம் கோடி ஊழல்

தேனியில் நடந்த மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பா.ஜ.கவின் மூத்த உறுப்பினரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பா.ஜ.க அரசின் சாதனைகளோடு, தி.மு.க அரசின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். பா.ஜ.க ஆட்சியில், 43 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு, 12 கோடி கழிப்பறை, 9 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு, வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவது பா.ஜ.க அரசு. மேலும், தமிழகத்தில் உட்கட்டமைப்பு திட்டங்களில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது மத்திய அரசு. ஆனால், நேரு முதல் கருணாநிதி வரை நமது நாட்டின் நிலப்பரப்புகளை மற்ற நாட்டிற்கு தாரைவார்த்து கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் ஊழல் பட்டியல் டெல்லி சென்றுள்ளது. தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறை அடித்த கொள்ளை 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். 2 ஜி அலைக்கற்றை ஊழல் எல்லாம் அருகில்கூட நிற்க முடியாது. புதுப்பேட்டை கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்தான், இன்று திருநாவுக்கரசர் உருவாக்கிய ஆதீனத்தை மிரட்டுகிறார். மதுரை ஆதீனத்தை மிரட்டுவீர்களா? அவரைத் தொட்டால் தி.மு.கவில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். எல்லோரும் பா.ஜ.கவுக்கு வந்துவிடுவார்கள். கோயில்களில் இருந்து அரசை விரட்டியடிக்க ஆதீனம் தலைமையில் ஒன்று சேர்வோம். இருக்கும் கோயிலை பராமரிக்க தகுதியற்ற தி.மு.க அரசு, சிதம்பரம் கோயிலை கைப்பற்ற முயற்சிக்கிறது. பாப்பான்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயில், கோபால்சாமி கோயிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நில ஆக்கிரமிப்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் அகற்ற தி.மு.க அரசு முன் வரவில்லை’ என்று கூறினார்.