சமையல் எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று பாரதம். நமது தேவையில் சுமார் 60 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால் நமது நாடு உட்பட உலகெங்கும் சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. கடந்த மாதம் இந்தோனேஷியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது. எனினும் பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது. ஆனால் இதன் காரணமாக விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், பாமாயில் மீதான ஏற்றுமதி வரியினை இந்தோனேஷியா தற்போது குறைத்துள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. நமது மத்திய அரசும் கச்சா பாமாயில் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 8.25 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைத்ததுடன் செஸ் வரியையும் 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் நமது நாட்டில் விரைவில் சமையல் எண்ணெய் விலை சற்று குறையலாம், பணவீக்கமும் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.