ஷாஹி இத்கா மசூதி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி சம்பந்தப்பட்ட வழக்கில் மனுதாரர்கள் குழு, கடந்த வியாழக்கிழமை, மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘மதுராவில் உள்ள கேஷவ் தேவ் கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட விலை உயர்ந்த சுவாமி சிலைகளை முகலாய கொடுங்கோல் பேரரசன் ஔரங்கசீப் 1670ல் ஆக்ராவின் பேகம் சாஹிபா மசூதியின் படிக்கட்டுகளின் கீழ் புதைத்ததாக கூறப்படுகிறது. அப்படி புதைக்கப்பட்ட ஹிந்து தெய்வங்களின் சிலைகளை உடனடியாக அங்கிருந்து அகற்றி பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதுவரை அந்த படிக்கட்டில் பொதுமக்கள் நடமாட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தெய்வ சிலைகளை இடமாற்றம் செய்யத் தவறினால் அவர்களே அந்த செலவுகளை ஏற்க நேரிடும்’ என்று கூறப்பட்டுள்ளது. சிவில் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 80ன் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என, மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளார். முன்னதாக, மதுரா நீதிமன்றம், இந்தப் பிரச்சினையின் மீதான மனுவை ஏற்க மறுத்துவிட்டது, பிரதிவாதிகளுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப வாதிகளைக் கேட்டுக் கொண்டது என்பது நினைவு கூரத்தக்கது.