தமிழகத்தில் பா.ஜ.க விஸ்வரூபம் எடுத்து வருவதை தி.மு.க எப்படி விரும்பவில்லையோ அதேபோல அ.தி.மு.கவும் விரும்பவில்லை என்பது அ.தி.மு.க மூத்த தலைவர் பொன்னையன் சமீபத்தில் பேசியதில் இருந்து தெரிய வருகிறது. ‘பா.ஜ.கவின் வளர்ச்சி அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அ.தி.மு.கவின் முதுகில் ஏறி பயணிக்க பா.ஜ.க விரும்புகிறது, பா.ஜ.க உடன் கூட்டணி என்பது வேறு, அதிமுகவின் கொள்கை என்பது வேறு, தமிழக பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும் என்று பேசியிருந்தார் பொன்னையன். இதற்கு பதில் அளித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘அ.தி.மு.க முதுகில் ஏறி பயணிக்க பா.ஜ.க ஆசைப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.கவுக்கு முக்கிய எதிர்கட்சியாக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. யாராக இருந்தாலும், முதலிடத்துக்கு வரவே விரும்புவார்கள். அதுதான் இயற்கையின் விதி’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி, ‘மக்களவை எம்.பி பதவி கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தியில் உள்ளார். அவர் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.