ஞானவாபி ஆய்வறிக்கையின் நகல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் ஹிந்துக்கள் தரப்பிடம்ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஆய்வறிக்கையை வேறு எவருக்கும் காட்ட மாட்டோம் என இரு தரப்பிலும் உறுதிமொழி கோரப்பட்டது. ஹிந்துக்கள் தரப்பு உறுதிமொழி அளித்ததால் அவர்களுக்கு இந்த நகல்கள் தரப்பட்டன.ஆனால், மசூதி நிர்வாகத்தினர் இதுவரை உறுதிமொழி அளிக்காததால் அவர்களிடம் ஆய்வறிக்கை நகல்கள் தரப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கை ஊடகங்களில் கசிந்தது. இதுகுறித்து பேசிய ஹிந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின், “எங்களிடம் அளிக்கப்பட்ட அறிக்கை நகலின் சீல் கூட இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கு முன்பாக அறிக்கை கசிந்தது ஹிந்துக்களுக்கு எதிரான சதியாகும். எனவே இதனை சி.பி.ஐ விசாரிக்க கோரி எங்களது சீல் பிரிக்காத அறிக்கையின் 4 உறைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம். ஆனால் இதனை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது” என தெரிவித்தார். மசூதி தரப்பு வழக்கறிஞர் அபய் நாத் யாதவ், “நீதிமன்றத் தடையை மீறி அறிக்கை கசிய வைக்கப்பட்டுள்ளது. தவறான தகவலை பரப்பி பொதுமக்கள் இடையே அமைதியை சீர்குலைப்பதே இதன் நோக்கம். எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.