கோயில் சொத்து மீட்பு உண்மையா?

ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஹிந்து சமய அறநிலையத் துறை சமீபத்தில் வெளியிட்ட ‘ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள்’ என்ற புத்தகத்தில் உண்மையான தகவல்கள் இடம் பெறவில்லை. உண்மைகளை மறைக்கப்பட்டுள்ளது. 1986ல் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், 5.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கோயில் நிலங்களாக காண்பிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது, 4.78 லட்சம் ஏக்கர்களாக குறைந்துள்ளன.

47 ஆயிரம் ஏக்கர் மாயமான விஷயம் குறித்து இன்று வரை விளக்கம் அளிக்கவில்லை. இந்த ஆவணத்தில் 4.78 லட்சம் ஏக்கர்களில், 3.43 லட்சம் ஏக்கர்களுக்கு தான் சரியான ஆவணங்கள் உள்ளதாக கூறுகின்றனர். 60 ஆண்டுகளாக கோயில்களை நிர்வகிக்கும் அரசிடம் இருந்து எப்படி 1.35 லட்சம் ஏக்கர்களுக்கான ஆவணங்களை தொலைத்தது?

கடந்த 2012ல் கோயில்கள், திருமடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமான நில விபரங்களை துல்லியமாகத் தந்த அறநிலையத் துறை, தற்போது 1.35 லட்சம் ஏக்கர்களுக்கு ஆவணங்கள் இல்லை என்று கூறுகிறது. ஆறு மாதங்களுக்கு மேல் குத்தகையோ, வாடகையோ தரவில்லை, குத்தகை, வாடகை பத்திரம் இல்லை, அடாவடி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளாகவே கருதப்பட வேண்டும். அவ்வகையில் குறைந்தபட்சம் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களும், 5 கோடி சதுர அடி மனைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இந்த ஆவணத்தில், 2,567 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் 40 ஆண்டுகளாக, இவற்றில் இருந்து வாடகையே வரவில்லை. அந்த தொகை குறித்து ஆவணத்தில் கூறப்படவில்லை. இது ஏமாற்று வேலை, ஊழலின் ஊற்றுக்கண். தி.மு.க அரசு, கோயில் நில ஆக்கிரமிப்பாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி எத்தனை கோயில் செயல் அலுவலர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு போட்டுள்ளனர்?

பல மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவை கோயில் நிலங்களில் தான் இயங்குகின்றன. இவற்றுக்கு வாடகை தருவதில்லை. மேலும் கோயில் பணத்தில் அலுவலகங்களை கட்டியுள்ளனர். இந்த தவறுகளை செய்த அறநிலையத் துறை அதிகாரிகள் மீது அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுப்பாரா? அறநிலையத் துறைக்கு சம்பந்தம் இல்லாத தணிக்கை நிறுவனம் வாயிலாக, கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். அப்போது தான் அறநிலையத் துறை எவ்வளவு அலட்சியம் காட்டியுள்ளது; எவ்வளவு ஊழல் புரிந்துள்ளது என்பது தெரியவரும்’ என்று கூறினார்.

நன்றி: தினமலர்