அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகரும், தொழிலதிபருமான ஜார்ஜ் போர்டோலோய் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தற்கொலைக் குறிப்பில், கிறிஸ்தவ மிஷனரி கல்வி நிறுவனமான டான் போஸ்கோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பாதிரி ஸ்டீபன் மாவேலி, போலி நிலம் தொடர்பான வழக்கில் தன்னை மனரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பாதிரி ஸ்டீபன் மாவேலியை கைது செய்தனர். நீதிமன்றத்தால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள சோனாபூர் பகுதியில் 99 ஏக்கர் அரசு மற்றும் வன நிலத்தை டான் போஸ்கோ பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜார்ஜ் போர்டோலோயின் தற்கொலைக் குறிப்பில், பாதிரி ஸ்டீபன் மாவேலி தனது பல்கலைக்கழக வளாகத்தின் எல்லைச் சுவர்களைக் கட்டுவதன் மூலம் யானைகளின் பல வழித்தடங்களைத் தடுத்தார். இது சோனாபூர் பகுதியில் மனித யானை மோதலுக்கு வழிவகுத்தது என தெரிவித்துள்ளார் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சோனாப்பூர் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள், ‘சில ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய வனப்பகுதியை டான் போஸ்கோ பல்கலைக்கழகம் எல்லை சுவர்களை கட்டி ஆக்கிரமித்து தங்கள் வளாகத்தை கட்டியது. இதன் பின்னர்தான், யானை வழித்தடங்கள் தடுக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதிகளில் மனித யானை மோதல்கள் வேகமாக அதிகரித்து வருகிறது’ என குற்றம் சாட்டியுள்ளனர். இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.