பாகிஸ்தானில் இருந்து 12 வருடங்களுக்கு முன் அகதியாக வந்த பூரா என்பவரின் குடும்பம், ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் வசிக்கிறது. இவர்கள் ஒரு பட்டியலின ஹிந்து குடும்பத்தினர். பூரா அப்பகுதியில் ஒரு மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மே 25 அன்று அவர் தனது காரில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே கால்நடைகளை ஏற்றிவந்த ஒரு சரக்கு வாகனம் இவரது காருடன் மோதியது. இதில் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சனை அதோடு முடிந்தது என பூரா எண்ணியிருந்த வேளையில், பக்ரா மண்டி பகுதியைச் சுற்றுப் பகுதியில் வசிக்கும் சுமார் 300 முஸ்லிம்கள் பூராவின் வீட்டிற்கு வந்து அவரது வீடு, வாகனம், கடையை அடித்து நொறுக்கி முற்றிலும் சேதப்படுத்தினர். கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். வீட்டிற்குள் புகுந்து அவரது சகோதரர், மருமகன், வீட்டில் உள்ள பெண்கள் மீது மூர்கமாக தாக்கினர். இதனால், அவர்களுக்கு பலத்த காயங்கள், எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் முஸ்லிம் கும்பலை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்களிடம் முஸ்லிம் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. ஹிந்து அகதிகளை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து வெளியான வீடியோவில், காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்துகொண்டது தெரிய வருகிறது. ஜோத்பூர் மேற்கு டி.சி.பி, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.