கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பனங்கால்முக்கைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். பா.ஜ.க. பிரமுகரான இவர் தனது மனைவியுடன் வேலைக்கு செல்வதற்காக புதுக்கடையில் இருந்து திங்கள்நகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இரணியல் அருகே மேக்கோடு என்ற இடத்தில், அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இரும்புக் கம்பிகளால் ராதாகிருஷ்ணனையும் அவரது மனைவியையும் கொடூரமாகத் தாக்கியது. இருவருக்கும் அந்த கும்பல் கொலை மிரட்டலும் விடுத்தது. இதில், ராதாகிருஷ்ணனின் கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவரவே அந்த நால்வரும் தப்பிச்சென்று விட்டனர். படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராதாகிருஷ்ணனின் மனைவி ரேணுகா, இரணியல் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரருக்கும், தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த முன்விரோதம் காரணமாகவே அந்த நான்கு பேரும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் அடிப்படையில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் புதுக்கடை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் தீவிர பாதுகாப்பு பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, ராதாகிருஷ்ணன் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதலை கண்டித்து புதுக்கடை பகுதியில் இந்துமுன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.