புல்டோசர் பாபாவின் நடவடிக்கை

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ‘புல்டோசர் பாபா’ என்ற ஒரு செல்லப் பெயரும் உண்டு. கடந்த மார்ச் மாதம் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் மீது சகிப்புத்தன்மை காட்ட வேண்டாம் என அரசு நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். குற்றவாளிகள், மாஃபியாக்களுக்கு எதிராக புல்டோசர்களை பயன்படுத்தி அவர்களுக்குச் சொந்தமான அனைத்து சட்டவிரோத சொத்துகளையும் அகற்ற வேண்டும். ஏழைகளின் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இருப்பினும், ஏழைகளின் குடிசைகள், கடைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியிருந்தார். அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து குற்றவாளிகள் தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்த பல வழக்குகளும் உள்ளன. சட்டவிரோத சொத்து வைத்திருக்கும் சிலர், தாங்களாக முன்வந்து தங்கள் சொத்துக்களை இடிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த விசித்திர சம்பவங்களும் அங்கு அறங்கேறியுள்ளன. இந்நிலையில், சமீபத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய தாதாக்களில் ஒருவரான முகமது ஆசிப் மீது கொலை, கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து முகமது ஆசிப்புக்கு சொந்தமான மூன்று சட்டவிரோத கட்டடங்களை புல்டோசர் மூலம் இடித்து அகற்றியது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, கடந்த 14 மாதங்களில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள குண்டர்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் சட்டத்தின் கீழ் ரூ. 980 கோடி மதிப்பிலான சொத்துகளை இடித்துக் கைப்பற்றியுள்ளது. மாநில அரசின் தரவுகளின்படி, 2020ல் ரூ. 834 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. 2021ல் ரூ.117 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இதேபோல பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.