ககன்யானை நோக்கி

இஸ்ரோ திட்டமிட்டுள்ள மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, திட எரிபொருளில் இயங்கும் ராக்கெட் பூஸ்டர் இன்ஜினின் நிலையான சோதனைச் செயலியை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தது.  இஸ்ரோவின் சமூக வலைதளத்தில் இந்த தகவல் ராக்கெட் பரிசோதனை புகைப்படத்துடன் பகிரப்பட்டுள்ளது. ராக்கெட்டின் இந்த முதல் கட்ட இந்த சோதனை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது ககன்யானின் பயணதிட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல். 203 டன் திட உந்துசக்தியுடன் ஏற்றப்பட்ட ஹெச்.எஸ் 200 பூஸ்டர் 135 வினாடிகளுக்கு சோதிக்கப்பட்டது. 20 மீ நீளமும் 3.2 மீ விட்டமும் கொண்ட பூஸ்டர் திட உந்துசக்தியுடன் கூடிய உலகின் இரண்டாவது பெரிய செயல்பாட்டு பூஸ்டர் ஆகும். இந்த பூஸ்டரின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் செய்யப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவில் சோதிக்கப்பட்டது.