கேரளாவின் மலப்புரத்தில் ஒரு மதரஸா திறப்பு விழா நடந்தது. அதன் ஒரு பகுதியாக சமஸ்தா கேரள ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் மாணவ மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் விருது பெற மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அந்த அமைப்பின் தலைவரும் மதகுருவுமான எம்டி அப்துல்லா முசலியார், இதனை கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர், ‘பத்தாம் வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்தது யார்? நீங்கள் இதை மீண்டும் செய்தால் அவ்வளவுதான். இத்தகைய பெண்களை இங்கு அழைக்காதீர்கள். உங்களுக்கு சமஸ்தா விதிகள் தெரியாதா? பாதுகாவலரை இங்கே அழைக்கவும். எங்களை இங்கே உட்கார வைத்து தேவையற்ற செயல்களைச் செய்யாதீர்கள். இது புகைப்படங்களில் வராதா’ என கூச்சலிட்டார். ஆனால், இதனை கண்டிக்க இதுவரை எந்த முற்போக்கு கட்சிகளோ பெண் அமைப்புகளோ இடதுசாரிகளோ முன்வரவில்லை. முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பின் முன்னாள் தேசிய துணைத் தலைவர் பாத்திமா தஹிலியா மட்டும் சிறுமிகளை மேடைகளில் இருந்து இறக்கி அவமானப்படுத்துவது சமூகத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.