அடல் கண்டுபிடிப்பு இயக்கம்

அடல் கண்டுபிடிப்பு இயக்கம், பிரைம் (கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம், சந்தை ஆயத்தம் மற்றும் தொழில்முனைவு) மற்றும் ஸ்டார்ட்அப் கண்காட்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர்  டாக்டர் பாரதி பிரவீன் பவார் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில்  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மாறுபட்ட புதிய சிந்தனைகளை மத்திய அரசு அங்கீகரித்தன் காரணமாகவே, பாரதத்தில் தயாரிப்போம் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம் சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத் துறைகளை ஊக்குவித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், மருத்துவ சாதனங்கள், நோய் கண்டறிதல், புரதம் அடிப்படையிலான உயிரியல், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பாரதம் பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணையில் பாரதம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதார சேவை முக்கிய இடம்பெற்ற நிலையில், நோய் கண்டறிதல், முழு உடல் கவச உடை தயாரிப்பு, வெண்டிலேட்டர் தயாரிப்பு மற்றும் தொலைதூர பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை கொண்டு சேர்ப்பதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின’ என கூறினார்.