இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினப் பேரணியில் பங்கேற்க இலங்கை சென்றுவந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அங்கு வாழும் பாரத வம்சாவளியினரையும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசினார். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ’13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த இலங்கையை பாரதம் வற்புறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். பாரதம் இலங்கை இடையே விமானம், கப்பல் மூலமாக துரிதப் போக்குவரத்து தேவை, இலங்கையிடம் பேசி, அரசியல் தீர்வு வழங்க பாரதம் முயற்சிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கூலியை அதிகமாகக் கொடுக்க இலங்கையை பாரதம் வற்புறுத்த வேண்டும், மலையகத் தமிழர்களுக்கு இன்னும் அதிகமான வீடுகளை கட்டித் தர வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்நாட்டுப் போருக்கு பிறகு, 42 ஆயிரம் ராணுவத்தினரை அங்கு நிறுத்தி இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன’ என தெரிவித்துள்ளார். இந்த பயண அனுபவம், சந்தித்த மக்கள், அவர்கள் வைத்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை, இந்த விஷயத்தில் தமிழக பா.ஜ.கவின் நிலைப்பாடு, நமது எதிர்பார்ப்பு உள்ளிட்ட விவரங்கள் கட்சித் தலைமைக்கு அனுப்பப்படும் என கூறினார்.