குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் மே 8ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு யாகசாலை முதல்கால பூஜை துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு தருமபுர ஆதீனம் சார்பில் கட்டளைத் தம்பிரான் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலயத்திற்கு அருகே உள்ள கட்டளை மடத்தில் தங்கியிருந்த தருமபுர ஆதீனத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து யாகசாலை பூர்ணாகுதி நிகழ்ச்சியில் இரண்டு மடாதிபதிகளும் பங்கேற்றனர். தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் இரண்டு ஆதீன மடாதிபதிகளின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரும் 22ம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தருமபுர ஆதீனம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு கோட்டாட்சியர் தடை விதித்ததற்கு ஹிந்து அமைப்பினரும், பா.ஜ.க, பா.ம.க, உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவை, தமிழ்நாடு கோயில்கள் மற்றும் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை ஆகிய அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளித்தனர். தமிழக அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மதுரை ஆதீனம், “பாரம்பரியம் மிக்க பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. நான் இப்படி பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் தருமபுர ஆதீனம்தான். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வர் வந்து நடத்த வேண்டும். முதல்வர் உடன்படவில்லை என்றால் அந்த சொக்கநாதரிடம் கோரிக்கை வைப்பேன். 500 ஆண்டு காலமாக பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆங்கிலேயர் காலத்திலும், காங்கிரஸ் ஆட்சியிலும், முதல்வராக கருணாநிதி இருந்த போதும் பட்டினப்பிரவேசமும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன்” என்றார்.