தமிழகத்தில் மிகவும் பழமையான ஆதீனம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனம். இதன் ஞானபீடாதிபதி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரத்தில் நடைபெற உள்ள பட்டின பிரவேச நிகழ்ச்சியின் போது, வெள்ளிப் பல்லக்கில் வீதியுலா வருவார். இதற்கு அம்மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்து உள்ளார். இதற்கு பல்வேறு ஆதீனங்களும், ஹிந்து அமைப்புகளும், பக்தர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஆதினம் ஹரஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்: தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கி செல்வதற்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம். மடத்திற்கு ஆளுநர் வந்து சென்றதால், பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 500 ஆண்டாக நடக்கும் பாரம்பரியத்தை நடத்தக்கூடாது என கூறுவது வருத்தம் அளிக்கிறது. முதல்வர் ரகசிய காப்பு எடுப்பதை கூடாது என சொல்வது போல தான் பட்டினபிரவேச நிகழ்ச்சியை கூடாது என சொல்வதும். தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை முதல்வர் நேரில் வந்து பார்க்க வேண்டும். சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறார். பட்டின பிரவேசத்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் செல்வேன். அரசியல் வேறு ஆன்மிகம் வேறு’ என்று கூறினார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த சிவலிங் கேஸ்வர சுவாமிகள்: மன்னர்கள் ஆட்சி காலத்திலிருந்து தொன்றுதொட்டு வரும் நடைமுறை, தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டுடன் கலந்தது. குருவிற்கு சிஷ்யர்கள் செய்யும் மரியாதை. இதில் யாருக்கும் எந்த கட்டாயமும் கிடையாது. கடவுள் மறுப்பு கொள்கை இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு தடை விதிப்பது நியாயமல்ல.
கோவை பேரூர் பச்சா பாளையம் பிள்ளையார்பீடம் பொன் மணிவாசக அடிகளார்: இந்த விஷயத்தில் அரசோ, அரசு நிர்வாகமோ தலையீடு செய்யக்கூடாது. ஹிந்து மதம் சார்ந்த விஷயம். இதை தி.க.,வினர் எதிர்ப்பது தவறு. இந்த நடைமுறை தருமபுர ஆதீன மடத்தின் மரபு. பக்தர்களும் சிஷ்யகோடிகளும் மனமுவந்து செய்யும் நிகழ்வு. குருவை வெள்ளிப்பல்லக்கில் ஏற்றி மகிழும் நிகழ்ச்சி குரு சிஷ்ய பக்தி விஷயம். இது ஹிந்து சமயத்தின் நடைமுறை.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: பல நுாற்றாண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்வுக்கு, கடவுள் மறுப்பு கொள்கை உடைய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லி தடை விதிப்பது நியாயமற்றது. பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை கோட்டாட்சியர் திரும்பப் பெற வேண்டும். ஹிந்து மதம் சம்பந்தமான விஷயத்தில் தி.கவினர் தொடர்ந்து இடையூறு செய்வது தேவையற்றது. இதைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபடும்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்: தி.கவினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தால், அதற்காக நிகழ்ச்சியை கோட்டாட்சியர் தடை செய்யக்கூடாது. ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை அவரது வருகையின் போது மாணவர்கள் ‘சாரட்’ வண்டியில் அமரச் செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதுபோல இந்த நிகழ்ச்சி குரு மரபு. இதற்கு அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல. கோட்டாட்சியர் பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
(நன்றி: தினமலர்)