இலங்கை மலையக வாழ் பாரத வம்சாவளி தமிழர்களின் கட்சியான ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ ஏற்பாடு செய்த மே 1 உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “பாரதத்தில் நடைபெறும் பிரதமர் மோடியின் ஆட்சியை உலகமே வியந்து பார்க்கிறது. உலகளவில் பாரதம் 5வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உக்ரைன் போரின்போது நமது நாட்டவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி பத்திரமாக மீட்டார். இலங்கை எங்கள் அண்டைநாடு. இங்கு வாழ்பவர்கள் எங்கள் சொந்தங்கள். அதனால் தான் உதவிக்கரம் நீட்டுகிறோம். மலையக மக்களுக்கான பாரதத்தின் உதவி இனிமேலும் தொடரும். இங்கு கல்வித் தரத்தை உயர்த்துவோம். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீண்டகாலம் நீடிக்காது. இலங்கையை நெருக்கடியில் இருந்து மீட்க பாரதம் தொடர்ந்து போராடும். சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்” என்றார். தனது 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு பாரதம் திரும்பும் அண்ணாமலை, இலங்கை மக்களின் நிலை குறித்து பா.ஜ.க தலைமைக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்வார்.