காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி) ஆத்மநிர்பர் பாரத் முயற்சிகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால், 2021 – 22 நிதியாண்டில் காதி ரூ. 1.15 லட்சம் கோடி விற்றுமுதலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 20.54 சதவீத வளர்ச்சியாகும். மத்திய அரசின் தொடர் முயற்சிகள், பிரதமர் மோடியின் தொடர்ச்சியான ஆதரவு, ஊக்குவிப்பின் விளைவே இந்த சாதனை என்றால் மிகை அல்ல. நாட்டிலுள்ள வேறெந்த எப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் விற்றுமுதலும் செய்யாத சாதனை இது என்பது உண்மையில் பாராட்டத்தக்கது. “ஆத்மநிர்பர் பாரத்” மற்றும் “உள்ளூருக்கான குரல்” என்ற பிரதமரின் அழைப்புகளுக்கு மக்கள் ஆர்வத்துடன் பதிலளித்துள்ளனர் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. 2014 முதல் கடந்த எட்டு ஆண்டுகளில், காதி துறையின் உற்பத்தி 191 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காதி விற்பனை 332 சதவீதம் அதிவேகமாக அதிகரித்துள்ளது. புதுமையான திட்டங்கள், ஆக்கப்பூர்வமான சந்தைப்படுத்தல் யோசனைகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் செயலூக்கமான ஆதரவு ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் காதியின் வளர்ச்சியை அதிகரித்துள்ளன. பல்லாயிரம் இளைஞர்களுக்கு இதனால் சுயதொழிலும் வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.