மேற்கு வங்க தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுடன், நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் 10 வழக்கறிஞர்கள் அடங்கிய குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது. அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான கோரிக்கையை வலியுறுத்தினர். அமித்ஷாவைச் சந்திப்பதற்கு முன், இக்குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து பேசினர். அவரிடம் மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது எனக் கூறி அவரிடமும் குடியரசுத் தலைவர் ஆட்சியை விதிக்க வலியுறுத்தினர். ‘மேற்குவங்கத்தில் கற்பழிப்பு, கொலை, எரித்தல், சூறையாடுதல், வன்முறைச் சம்பவங்கள் இப்போது தினசரி வழக்கமாகிவிட்டன. எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மத்திய அரசின் தலையீடு அவசியம் தேவை’ என்று பிரதிநிதிகள் குழு வழக்கறிஞர்கள், ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.