மதுரை கிரம்மாபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார், தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் உறுப்பினராக உள்ளார். இவர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘திருச்சி பிஷப் மார்ட்டின் சர்ச் தேவைகளுக்கு ரூ. 1½ கோடியை ஏற்பாடு செய்து கொடுத்தால், திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத்தருவதாக தெரிவித்தார். அவர் சொன்னதை நம்பி பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத் தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு, அதே போல மீண்டும் ரூ. 1½ கோடி கொடுத்தால் கட்டாயம் வாங்கி தருவதாக கூறினார். ஆனால் ஆசிரியர் பணி பெற்றுத்தராமல் ஏமாற்றி ரூ. 3 கோடியை மோசடி செய்துவிட்டனர். எனவே, ஏமாற்றிய பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகியோர் மீது நடவடிக்கை வேண்டும், ரூ. 3 கோடியை பெற்றுத்தர வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகிய மூவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.