கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளும், அமெரிக்க ராணுவம் விட்டுச்சென்ற நவீன ராணுவ தளவாடங்களும் காஷ்மீருக்குள் நுழையக்கூடும் என பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே அச்சம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், டெல்லியில் ‘ரைசினா டயலாக்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம் நரவனே, ‘காஷ்மீரில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் ராணுவ தளவாடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் தற்போதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்கு வரவில்லை. ஆப்கானிஸ்தானில் முந்தைய தலிபான்களின் ஆட்சி இருந்தபோது காஷ்மீரில் நுழைந்த சில ஆப்கானிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். சிலர் சண்டையில் கொல்லப்பட்டனர்’ என தெரிவித்தார். மேலும், உக்ரைன் மோதலைப் பற்றிப் பேசிய நரவனே, ‘உக்ரைனின் தற்போதைய நெருக்கடி, வழக்கமான போர் முறைகள் காலம் கடந்துவிட்டன. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் ஒரு போரை நிறுத்தும் என்ற இரண்டு கட்டுக்கதைகளை உடைத்துவிட்டது’ என தெரிவித்தார்.பென்டகன் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள நவீன ராணுவ உபகரணங்களை அமெரிக்கா விட்டுச் சென்றுள்ளது. இந்த உபகரணங்களை மீட்டெடுக்க அல்லது அழிக்க அமெரிக்காவிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது என சி.என்.என் தெரிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.