குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டம்

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காணொலி பிராந்திய மாநாடுகளை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்தது. கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு விரிவான ஆதரவை வழங்குவதற்காக மே 29, 2021 அன்று குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டம் பிரதமரால் தொடங்கப்பட்டது. இணையதளம் மூலம் அத்தகைய குழந்தைகளை அடையாளம் காணவும், பதிவு செய்யவும், ஆதரவளிக்கவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்துகிறது. இம்மாநாட்டில் பேசிய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, ‘கல்வி ஆதரவு, சுகாதாரம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாக்க, அவர்களது 23 வயது வரை பிரதமர் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளை இத்திட்டத்துடன் இணைக்க வேண்டும். இதனால் இத்தகைய குழந்தைகள், திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள்’ என்று கூறினார்.