ஊராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி மரத்தால் ஆன அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி, தொடர்ந்து 40 நாட்கள் தரிசனம் அளிப்பார்.கடந்த 2019, ஜூலை 1 முதல், ஆகஸ்ட் 16 வரை, அத்தி வரதர் வைபவம் காஞ்சியில் விமர்சையாக நடந்தது. இந்த வைபவம் நினைவாக சில ஊராட்சிகளில் அத்தி மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி பாலாற்றின் கரையோரத்தில் அரசுக்கு சொந்தமான 2.5 ஏக்கர் பரப்பு நிலத்தில் 140 அத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன. அவற்றை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பராமரித்தனர். ஊராட்சி நிர்வாகம் இதனை முறையாக பராமரித்து வந்ததால், அவை தற்போது சுமார் 20 அடி உயரத்திற்கு செழுமையாக வளர்ந்து அழகியத் தோப்பாக காட்சி அளிக்கிறது. இதனை பராமரித்து வரும் ஊராட்சி நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் பாராட்டியதுடன் வேலி அமைத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.