மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இன்று நடைபெற்ற 48வது அனைத்திந்திய காவல்துறை அறிவியல் மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். ‘காஷ்மீரில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், வடகிழக்கில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகிய மூன்று சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மத்திய அரசு பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பல ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளன. அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பிறகு, காஷ்மீரில் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. 10 ஆண்டு காவல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வருடாந்திர மதிப்பாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை நவீனமயமாக்கல், பயிற்சி, மாநில காவல்துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் ஆகியவை அவசியம். நாடு முழுவதும் உள்ள காவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தரவுகளை ஒருங்கிணைக்க வேண்டும். மத்திய அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாரதம் இன்று ஒரு பெரிய உலகளாவிய சக்தியாக உருவாகி வருகிறது’ என பேசினார்.