கர்நாடக மாநிலம் மங்களூருவின் புறநகரில் உள்ள மலாலியில் உள்ள ஜும்ஆ மசூதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த கட்டடத்திற்குள் தூண்களுடன் கூடிய ஹிந்து கோயில் போன்ற அமைப்புகள் காணப்பட்டன. இதனையடுத்து, மசூதி கட்டுவதற்கு முன் அங்கு கோயில் இருந்ததா, கோயிலை ஆக்கிரமித்து அல்லது அழித்து மசூதி எழுப்பப்பட்டதா? என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பினர். அந்த இடம் குறித்து அனைத்து ஆவணங்களும் முறையாக சரிபார்க்கப்படும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டது. இதனையடுத்து, இது குறித்து கள அதிகாரிகள், காவல் துறையிடம் இருந்து தகவல் பெற்ற மாவட்ட நிர்வாகம், பழைய நிலப் பதிவுகள், உரிமை விவரங்களை ஆய்வு செய்து வருகிறது. ஹிந்து அறநிலையத்துறை, வக்பு வாரியத்திடம் அறிக்கைகளை கோரியுள்ளது. அவற்றை சரிபார்த்து விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும். அதுவரை, தற்போதைய நிலையைத் தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாவட்ட நிர்வாகம், மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.