நல்ல உணவு நேரமெடுக்கும்

நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன். உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சிறிது நேரம் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் அருகே இருந்த டேபிளில் அமர்ந்தனர். ஆர்டர் கொடுத்தார்கள். உடனேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உண்டார்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டல் செய்தார். தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் விரைவான, சிறந்த சேவை கிடைத்தது. பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார்.

என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை கேன்ஸல் செய்து புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன். வெயிட்டர், என்னிடம், சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது என்றார். நான் அமைதியாக பொறுமை காத்தேன்.

சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 வெயிட்டர்கள் பறிமாறினார்கள். மிகவும் சுவையான உணவு, நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர். அவர் என்னை ஆச்சரியப்படுத்த, எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்க செஃப்புக்கு அறிவுறுத்தினார். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போனார்கள். தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமானார்கள். அது தான் வாழ்க்கை.

சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள். நமக்குக்கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே. ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்…

கவலை வேண்டாம். கடவுள் நமக்கு நல்ல ஒரு உணவு தர நம்மை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை தலைமை சமையல்காரரால் மட்டுமே தயாரிக்க முடியும். பொறுமையாக நம் கடமைகளை சரியாக செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போவார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட நாளை அப்போது அனுபவிப்போம். நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும்.யாராலும் தடுக்க முடியாது.

(படித்ததில் பிடித்தது)