திருச்சி புத்தூர் பகுதியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலகத்தை, அச்சங்கத்தின் நிறுவனத் தலைவரும், தி.மு.க நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மோடி எங்களுக்கு பங்காளியோ, பக்கத்து வீட்டுக்காரரோ, பக்கத்து மாநிலத்துக்காரரோ இல்லை. இந்நாட்டின் மீது பற்று கொண்ட ஒரே நபர் மோடி. நம்ம நாட்டின் மீது பற்று கொண்டவர்களில் காந்தி போன்றவர்களை பார்த்திருப்போம். அதன் பிறகு, தற்போதுதான் நாட்டை முன்னேற்ற வேண்டும், உலக நாடுகள் மத்தியில் பாரதம் என்றால் தலைநிமிர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு வருகிறார். நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் உழைக்கிறார். அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை நேசிப்பார்கள்; ஏற்றுக் கொள்வார்கள். பாரதத்தின் பெருமையை பாதுகாக்க, நாட்டுப்பற்றுக் கொண்டு, நாட்டுக்காக உழைத்து வரும் பெருமகன் மோடி. இதே தமிழகம், மோடியை புகழ்ந்து பாராட்டும் காலம் விரைவில் வரும். அது வெகு தொலைவில் இல்லை. போட்டித்தேர்வை எதிர்கொள்ள அடிப்படை கல்வி வலுவாக இருக்க வேண்டும். அதற்கான தகுதியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சற்றுக் கடினமாக இருந்தாலும் கூட, நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை சரியானது. அதில் இருந்து ஒன்றிரண்டை எடுத்து போட்டு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கை தேவையற்றது. மருத்துவக் கல்வி உட்பட விண்ணப்பங்கள் அதிகமாக வரும் போது போட்டி தேர்வு மட்டுமே சமூக நீதியை பாதுகாக்கும்” என்றார்.